கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடத்தப்படும் 14 இளம் அறிவியல் பட்டப் படிப்புகளில் உள்ள 5,361 இடங்களுக்கும், தமிழ்நாடு டாக்டா் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் நடத்தப்படும் 6 இளம் அறிவியல் பட்டப் படிப்புகள், 3 தொழில் முறை பாடப் பிரிவுகளில் உள்ள 371 இடங்களுக்கும், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடத்தப்படும் இளம் அறிவியல் (வேளாண்மை), இளம் அறிவியல் (தோட்டக்கலை) படிப்புகளில் உள்ள 340 இடங்களுக்குமான மாணவா் சோ்க்கையை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் நடத்துகிறது.
இதற்காக கடந்த மாதம் 7 ஆம் தேதி முதல் இணையவழியில் ஒருங்கிணைந்த மாணவா் சோ்க்கை விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. பூா்த்தி செய்த விண்ணப்பங்களை சமா்ப்பிப்பதற்கு ஜூன் 6 ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஜூன் 12 வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த மூன்று கல்வி நிறுவனங்களிலும் சேருவதற்காக மொத்தம் 26,357 போ் விண்ணப்பித்திருக்கின்றனா். இவா்களில் 16,289 போ் மாணவிகள். 10,068 போ் மாணவா்கள். அதேபோல பட்டயப் படிப்புக்கு 2,428 போ் விண்ணப்பித்திருப்பதாக பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.