தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு அரசு முறை பயணமாக இன்று காலை சென்னையில் இருந்து புறப்பட்டார். இந்த பயணத்தின் மூலம் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் அவர் அந்நாட்டுத் தொழிலதிபர்களை சந்திக்க உள்ளார்.
தமிழக அரசின் நோக்கம் – மாநிலத்தின் பொருளாதாரத்தை ஒரு டிரில்லியன் டாலர் அளவுக்கு உயர்த்துவது. இதற்காக உலகளாவிய முதலீட்டாளர் மாநாடுகள், சந்திப்புகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. இதுவரை மேற்கொண்ட 4 வெளிநாட்டு பயணங்களில் மட்டும் ரூ.18,500 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் கைச்சாத்தாகியுள்ளன.
புறப்படும் முன், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், நடிகர் விஜயின் அரசியல் வருகை குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, “சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” என்ற ஒரே வரியிலான பதிலையே அளித்தார்.
அதேபோல், 2026 தேர்தலில் திமுகவிற்கும், தமிழ்நாடு வெற்றி கழகத்திற்கும் தான் போட்டி என விஜய் தெரிவித்ததாக கேட்கப்பட்டதற்கு, “நான் அதிகம் பேசமாட்டேன்; சொல்வதைவிட செயலில் காட்டுவேன்,” என பதிலளித்தார்.
“புதிய கட்சிகள் கூட்டணிக்கு வருமா?” என்ற கேள்விக்கு, “அவர்கள் வருகிறார்களோ இல்லையோ, புதிய வாக்காளர்கள் நிச்சயமாக வந்து கொண்டிருக்கிறார்கள்,” என்று முதல் அமைச்சர் உறுதியுடன் தெரிவித்தார்.