• 16 Apr, 2026

அமெரிக்கா–வங்கதேச வர்த்தக ஒப்பந்தம்: திருப்பூர் ஆயத்த ஆடை துறைக்கு புதிய நெருக்கடி

அமெரிக்கா–வங்கதேச வர்த்தக ஒப்பந்தம்: திருப்பூர் ஆயத்த ஆடை துறைக்கு புதிய நெருக்கடி

அமெரிக்கா–வங்கதேச வர்த்தக ஒப்பந்தத்தால் இந்திய தயாரிப்புகள் விலை உயர்ந்து, திருப்பூர் ஏற்றுமதி துறைக்கு சவால் உருவாகியுள்ளது.

திருப்பூரின் மொத்த பின்னலாடை ஏற்றுமதியில் அமெரிக்கா முக்கிய சந்தையாக உள்ள நிலையில், இந்திய தயாரிப்புகளுக்கு சுமார் 18 சதவீத வரி விதிக்கப்படுகிறது. இதே நேரத்தில், வங்கதேச தயாரிப்புகளுக்கு அமெரிக்காவுடன் செய்யப்பட்ட புதிய வர்த்தக ஒப்பந்தம் காரணமாக, அமெரிக்கப் பருத்தி மற்றும் செயற்கை நூல்களில் தயாரிக்கப்படும் துணிகள் வரியின்றி அமெரிக்க சந்தையில் நுழைகின்றன. இதனால் வங்கதேச தயாரிப்புகள் இந்திய தயாரிப்புகளை விட 15 முதல் 18 சதவீதம் வரை குறைந்த விலையில் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

இந்த விலை வித்தியாசம் காரணமாக, அமெரிக்காவின் முன்னணி வர்த்தக நிறுவனங்கள் தங்களின் ஆர்டர்களை திருப்பூரிலிருந்து வங்கதேசத்திற்கு மாற்றக்கூடும் என ஏற்றுமதியாளர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். மேலும், இந்த ஒப்பந்தம் இந்தியப் பருத்தி மற்றும் நூல் விற்பனையையும் மறைமுகமாக பாதிக்கும் சூழல் உருவாகியுள்ளது. இதை சமாளிக்க, இந்திய ஜவுளித்துறைக்கும் இதே போன்ற வரிச்சலுகைகள் பெற ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழில்துறையினர் கோரிக்கை வைத்துள்ளனர்.