• 18 Apr, 2026

கிராமங்களில் நான்கில் ஒருவருக்கு இதய பாதிப்பு: ஆய்வு தகவல்

கிராமங்களில் நான்கில் ஒருவருக்கு இதய பாதிப்பு: ஆய்வு தகவல்

கோவை–திருப்பூர் கிராமங்களில் நடத்தப்பட்ட ஆய்வில், அறிகுறிகள் இல்லாமல் இருப்பவர்களில் நான்கில் ஒருவருக்கு ஆரம்பக்கட்ட இதய நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியாவில் இதய நோய்கள் நகரங்களில் வசிப்பவர்களுக்கு மட்டுமே ஏற்படும் என்ற பொதுவான கருத்து தற்போது மாறி வருகிறது. கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களைச் சுற்றியுள்ள கிராமப்புறங்களில் நடத்தப்பட்ட ஆய்வு இதை உறுதிப்படுத்தியுள்ளது.

KMCH Hospital மற்றும் அதன் ஆராய்ச்சி அறக்கட்டளை இணைந்து ‘REACH Rural India’ என்ற ஆய்வை மேற்கொண்டது. இந்த ஆய்வு முடிவுகள் உலகப் புகழ்பெற்ற The Lancet மருத்துவ இதழில் வெளியாகியுள்ளது.

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களின் கிராமப்புறங்களில் 35 முதல் 65 வயதுக்குட்பட்ட 3,000-க்கும் மேற்பட்டோரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. ‘CAC score’ எனப்படும் நவீன பரிசோதனை மூலம் ரத்த நாளங்களில் சுண்ணாம்பு படிவங்கள் உள்ளதா என்பதை மருத்துவர்கள் ஆய்வு செய்தனர்.

அதன்படி, எந்தவித அறிகுறிகளும் இல்லாமல் ஆரோக்கியமாக இருப்பதாகத் தோன்றும் கிராமப்புற மக்களில் 25.6% பேருக்கு, அதாவது நான்கில் ஒருவருக்கு, இதய ரத்த நாளங்களில் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. பெண்களை விட ஆண்களுக்கே இந்த பாதிப்பு அதிகமாக உள்ளது. மேலும் இந்த பாதிப்பு உள்ளவர்களில் 83% பேருக்கு நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் அல்லது அதிக கொழுப்பு போன்ற குறைபாடுகள் இருப்பதும் தெரியவந்துள்ளது.

Screenshot 2026-02-26 145227
 

 

“இதய நோய் என்பது இனி நகரங்களுக்கு மட்டும் உரியது அல்ல” என இந்த ஆய்வின் முதன்மை ஆய்வாளர் டாக்டர் தாமஸ் அலெக்சாண்டர் தெரிவித்துள்ளார். கிராமப்புற மக்களின் வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால் அறிகுறிகள் இல்லாமலேயே ரத்த நாளங்களில் பாதிப்புகள் உருவாகி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த ஆய்வு முடிவுகள் மக்களை பயமுறுத்துவதற்காக அல்ல, மாறாக ஒரு எச்சரிக்கை மணி என மருத்துவர்கள் கூறுகின்றனர். முன்கூட்டியே பரிசோதனை செய்து கண்டறிந்தால் மாரடைப்பு ஏற்படுவதற்கு முன்பே அதைத் தடுக்க முடியும். உணவு பழக்கங்களில் மாற்றம், முறையான உடற்பயிற்சி மற்றும் மருத்துவர்களின் ஆலோசனையைப் பின்பற்றுவதன் மூலம் பெரிய ஆபத்துகளைத் தவிர்க்க முடியும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.