• 19 Apr, 2026

2022 ஐபிஎல் தொடர் அட்டவணை மற்றும் அணிகள் பிரிவு அறிவிப்பு

2022 ஐபிஎல் தொடர் அட்டவணை மற்றும் அணிகள் பிரிவு அறிவிப்பு

15வது ஐபிஎல் தொடர் மார்ச் 26 முதல் மே 29 வரை மும்பை மற்றும் பூனேவில் நடைபெறுகிறது. இரண்டு புதிய அணிகள் இணைந்துள்ளதால் மொத்தம் 70 லீக் போட்டிகள் நடத்தப்படவுள்ள நிலையில், அணிகள் ஏ மற்றும் பி என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

2022-ம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. 15வது ஐபிஎல் தொடர் வரும் மார்ச் மாத இறுதியில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் மார்ச் 26ஆம் தேதி தொடங்கி மே 29ஆம் தேதி வரை நடைபெறும் என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.

இந்த தொடரின் லீக் போட்டிகள் மும்பை மற்றும் பூனே நகரங்களில் உள்ள நான்கு மைதானங்களில் நடத்தப்பட உள்ளன. ப்ளே ஆஃப் சுற்று போட்டிகள் நடைபெறும் மைதானங்கள் குறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் என இரண்டு புதிய அணிகள் சேர்க்கப்பட்டுள்ளதால், மொத்தமாக 10 அணிகள் பங்கேற்கின்றன. இதனால் 2022 ஐபிஎல் தொடரில் மொத்தம் 70 லீக் போட்டிகள் நடைபெற உள்ளன.

இந்த முறை ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் அணிகள் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தலா 14 லீக் போட்டிகளில் விளையாடும். ஒவ்வொரு பிரிவிலும் உள்ள அணிகள் தங்கள் பிரிவைச் சேர்ந்த மற்ற அணிகளுடன் தலா இரண்டு போட்டிகளில் மோதும். அதேபோல், மற்றொரு பிரிவில் அதே இடத்தில் உள்ள அணியுடன் இரண்டு போட்டிகளிலும், மற்ற பிரிவில் உள்ள மீதமுள்ள அணிகளுடன் தலா ஒரு போட்டியிலும் விளையாடும் வகையில் அட்டவணை அமைக்கப்பட்டுள்ளது.

ஏ குரூப்பில் மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் இடம்பெற்றுள்ளன. பி குரூப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இடம் பெற்றுள்ளன.

இதனால், 2022 ஐபிஎல் தொடர் ரசிகர்களுக்கு அதிக போட்டி மற்றும் பரபரப்பான ஆட்டங்களை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.