• 16 Apr, 2026

ஆன்லைன் ஆடை ஆர்டர் பெயரில் ரூ.6.82 லட்சம் மோசடி: புனே பெண் சைபர் குற்றவாளிகளின் வலையில் சிக்கினார்

ஆன்லைன் ஆடை ஆர்டர் பெயரில் ரூ.6.82 லட்சம் மோசடி: புனே பெண் சைபர் குற்றவாளிகளின் வலையில் சிக்கினார்

புனேயில் வசிக்கும் பெண் ஒருவர் ஆன்லைன் ஆடை ஆர்டர் செய்ததன் பின்னர், டெலிவரி சிக்கல் என கூறி முன்பணம் கேட்ட நபர்களால் ஏமாற்றப்பட்டார். தவறான தொகை அனுப்பியதாக கூறி மீண்டும் மீண்டும் பணம் அனுப்ப வற்புறுத்தியதில், இரண்டு நாட்களில் 10 ஆன்லைன் பரிவர்த்தனைகள் மூலம் ரூ.6.82 லட்சத்தை இழந்தார். ஆர்டர் செய்த ஆடை இதுவரை டெலிவரி செய்யப்படவில்லை.

மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் வசிக்கும் பெண் ஒருவர் Biba.in என்ற ஆன்லைன் வர்த்தக தளத்தில் ரூ.1700 மதிப்புள்ள ஆடை ஒன்றை ‘Cash on Delivery’ முறையில் ஆர்டர் செய்தார். ஆர்டர் செய்த அடுத்த நாள், அந்த நிறுவனத்திலிருந்து பேசுவதாக கூறி ஒருவர் தொடர்பு கொண்டு, டெலிவரி முகவரி நாசிக்கில் இருப்பதாகவும், முன்பணம் செலுத்தினால் வேறு ஏஜென்சி மூலம் பொருளை அனுப்பி வைக்கலாம் என்றும் தெரிவித்தார்.

அந்த நபர் அனுப்பிய கியூஆர் கோடு மூலம் அந்த பெண் ரூ.1700.05 அனுப்பிய நிலையில், தவறான தொகை அனுப்பப்பட்டதாக கூறி மீண்டும் பணம் அனுப்புமாறு வற்புறுத்தப்பட்டது. இதனை நம்பிய பெண் மீண்டும் ரூ.1700.50 அனுப்பினார். தொடர்ந்து பணம் கிடைக்கவில்லை என கூறி மீண்டும் மீண்டும் பணம் அனுப்புமாறு கூறப்பட்டதால், இரண்டு நாட்களில் 10 ஆன்லைன் பரிவர்த்தனைகள் மூலம் மொத்தம் ரூ.6.82 லட்சத்தை அவர் அனுப்பி வைத்தார்.

ஆனால் இதுவரை அவர் ஆர்டர் செய்த ஆடை டெலிவரி செய்யப்படவில்லை. இது ஆன்லைன் ஷாப்பிங் பெயரில் நடைபெற்ற சைபர் மோசடி என தெரியவந்துள்ள நிலையில், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.