• 18 Apr, 2026

கோவையில் “MYO SHIELD” சுகாதார திட்டம் தொடக்கம்

கோவையில் “MYO SHIELD” சுகாதார திட்டம் தொடக்கம்

கோயம்புத்தூர் ரோட்டரி கிளப் சார்பில் தசை அழிவு நோய் தடுப்புக்கான “MYO SHIELD” உலகளாவிய மானியத் திட்டம் தொடங்கப்பட்டது.

கோயம்புத்தூர் ரோட்டரி கிளப், தலைவர் ரோட்டேரியன் டாக்டர் சித்ரா மனோஹர் தலைமையில், “MYO SHIELD” எனும் உலகளாவிய மானியத் திட்டத்தை சிறப்பாக தொடங்கியது. தசை அழிவு நோயைத் தடுக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட இந்த முன்னோடியான திட்டத்தின் துவக்க விழா நீலாம்பூர் ராயல் கேர் மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள MDCRC மையத்தில் நடைபெற்றது.

 

Screenshot 2026-02-26 154907
 

 

 

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆளுநர் ரோட்டேரியன் செல்லா கே. ராகவேந்திரன் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு திட்டத்தைத் துவக்கி வைத்தார். தனது உரையில், சமூகத்தில் உள்ள முக்கிய சுகாதார சவால்களை எதிர்கொள்ள கிளப் மேற்கொண்டு வரும் முயற்சிகளை பாராட்டியதுடன், தடுப்பு மருத்துவத்தின் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

தொடர்ந்து பேசிய கிளப் தலைவர் டாக்டர் சித்ரா மனோஹர், “MYO SHIELD என்பது சாதாரண திட்டம் அல்ல; கருணையும் பொறுப்பும் இணைந்த ஒரு சமூகப் பணி. நீடித்த மாற்றத்தை உருவாக்க எங்கள் கிளப் உறுதியாக செயல்படும்,” என்றார்.

இந்நிகழ்ச்சியில் ரோட்டேரியன் ஏ.வி. பதி, எஸ். ராஜசேகர், செந்தில் ராஜகோபால் உள்ளிட்ட பல ரோட்டரி தலைவர்கள் கலந்து கொண்டு திட்டத்தின் முக்கியத்துவத்தை பாராட்டினர். MDCRC அறக்கட்டளையின் நிறுவனர் டாக்டர் பி.ஆர். லக்ஷ்மி, தசை அழிவு போன்ற நரம்பு-தசை குறைபாடுகளைத் தடுப்பதில் ஆரம்ப பரிசோதனை மற்றும் மரபணு ஆலோசனையின் அவசியத்தை எடுத்துரைத்தார்.

MYO SHIELD திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு பரிசோதனை, மேம்பட்ட மரபணு பரிசோதனை மற்றும் ஆலோசனை சேவைகள் வழங்கப்படுகின்றன. இதன் மூலம் மரபணு சார்ந்த கடுமையான நரம்பு-தசை நோய்கள் பரவுவதைத் தடுக்கவும், எதிர்கால தலைமுறைகளை பாதுகாக்கவும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

நிகழ்ச்சி செயலாளர் ரோட்டேரியன் டாக்டர் டி. பினா நன்றி உரையுடன் நிறைவுற்றது.