• 16 Apr, 2026

ஹட்சன் பேட்மிண்டன் சென்டரில் பயிற்சியாளராக டத்தோ மிஸ்பன் சிடெக் நியமனம்

ஹட்சன் பேட்மிண்டன் சென்டரில் பயிற்சியாளராக டத்தோ மிஸ்பன் சிடெக் நியமனம்

ஹட்சன் பேட்மிண்டன் சென்டர்-ல், உலகப்புகழ் பெற்ற பயிற்சியாளர் டத்தோ மிஸ்பன் சிடெக் உயர் செயல்திறன் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பால் பொருட்கள் தயாரிப்பில் நாடளவில் புகழ்பெற்ற ஹட்சன் அக்ரோ புராடக்ட் லிமிடெட், இந்திய விளையாட்டு திறனை மேம்படுத்தும் நோக்கில் ‘ஹேப் ஸ்போர்ட்ஸ் டிரஸ்ட்’ அமைப்பை நிறுவி செயல்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக செயல்படும் ஹட்சன் பேட்மிண்டன் சென்டர், உலகப் புகழ் பெற்ற பேட்மிண்டன் பயிற்சியாளர் டத்தோ மிஸ்பன் சிடெக் அவர்களை உயர் செயல்திறன் பயிற்சியாளராக நியமித்துள்ளது.

உலக தரவரிசையில் முதலிடம் வகித்த ரஷித் சிடெக், ரோஸ்லின் ஹாஷிம் மற்றும் லீ சோங் வெய் ஆகிய முன்னணி வீரர்களுக்கு பயிற்சி அளித்த அனுபவம் கொண்ட மிஸ்பன் சிடெக், இம்மையத்தில் பயிற்சி பெறும் இளம் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் விளையாட்டுத் திறன், உடற்தகுதி மற்றும் போட்டித் தயார்நிலையை மேம்படுத்தும் வகையில் சிறப்பு பயிற்சிகளை வழங்க உள்ளார்.

இந்த நியமனம் குறித்து பேசிய மிஸ்பன் சிடெக், ஹட்சன் பேட்மிண்டன் சென்டரின் உள்கட்டமைப்பு வசதிகள் தீவிரப் பயிற்சிக்கு ஏற்றதாக இருப்பதாகவும், இந்தியாவில் அடுத்த உலகத் தர சாம்பியனை உருவாக்கும் முயற்சியில் தாம் பங்கெடுக்க விரும்புவதாகவும் தெரிவித்தார்.

இதுகுறித்து ஹட்சன் அக்ரோ புராடக்ட் லிமிடெட் தலைவர் ஆர்.ஜி. சந்திரமோகன் கூறுகையில், “உலகத் தர பயிற்சியாளர்களின் வழிகாட்டுதலுடன் இளம் வீரர்களை உருவாக்குவதே எங்கள் நோக்கம். மிஸ்பன் சிடெக் அவர்களின் நியமனம், இந்தியாவிலிருந்து உலகத் தர சாம்பியன்களை உருவாக்கும் முயற்சிக்கு உறுதியான அடித்தளமாக அமையும்” என்றார்.

தற்போது இந்த மையத்தில் 300-க்கும் மேற்பட்ட இளம் வீரர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். உலக தரவரிசையில் 88-வது இடத்தில் உள்ள தமிழக வீரர் எஸ். ரித்விக் சஞ்சீவி உள்ளிட்டோர், மிஸ்பன் சிடெக் அவர்களின் நேரடி வழிகாட்டுதலில் பயிற்சி பெற உள்ளனர்.