• 18 Apr, 2026

விஐடி பல்கலைக்கழகத்தில் ஜிஎஸ்டி வரி விழிப்புணர்வு மாநாடு

விஐடி பல்கலைக்கழகத்தில் ஜிஎஸ்டி வரி விழிப்புணர்வு மாநாடு

விஐடி பல்கலைக்கழகம்-இல் ஜிஎஸ்டி விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு மாநாடு சிறப்பாக நடைபெற்றது.

விஐடி பல்கலைக்கழகத்தில், இந்திய பட்டய கணக்காளர் சங்கம் வேலூர் கிளை சார்பில் “ஜிஎஸ்டி விதிமுறைகளை கையாளுதல் மற்றும் வளர்ச்சியை மேம்படுத்துதல்” என்ற தலைப்பில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விழிப்புணர்வு மாநாடு இன்று நடைபெற்றது.

புதுடெல்லி ஐசிஏஐ மத்திய கவுன்சில் உறுப்பினர் பி. ராஜேந்திர குமார், சிறப்பு விருந்தினராக காணொலி வாயிலாக பங்கேற்று, ஜிஎஸ்டி துறையில் ஏற்பட்டுள்ள சமீபத்திய மாற்றங்கள் மற்றும் நடைமுறைகள் குறித்து விரிவாக விளக்கினார்.

மாநாட்டிற்கு தலைமை வகித்து விஐடி பல்கலைக்கழக செயல் இயக்குநர் சந்தியா பென்டாரெட்டி பேசும்போது, “ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் ஏற்படுத்தும் தாக்கத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். குறிப்பாக கல்வி நிறுவனங்களின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் போது விதிக்கப்படும் ஜிஎஸ்டி, மாணவர்கள் செலுத்தும் கல்விக்கட்டணத்தில் பிரதிபலிக்க வாய்ப்புள்ளது” என்றார்.

கவுரவ விருந்தினராக கலந்து கொண்டு, வேலூர் கோட்ட ஜிஎஸ்டி உதவி ஆணையர் டி.பி. சுரேஷ் பேசும்போது, “நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் ஜிஎஸ்டி முக்கிய பங்காற்றி வருகிறது. வருங்கால தலைமுறையினர் ஜிஎஸ்டி நடைமுறைகளை தெளிவாக புரிந்து கொள்வது அவசியம்” என்று குறிப்பிட்டார்.

இந்த மாநாட்டில் வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட தொழில்முறை வல்லுநர்கள், 1000-க்கும் மேற்பட்ட வணிகவியல் துறை மாணவர்கள் மற்றும் 50 பட்டய கணக்காளர் சங்க மாணவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும், இணை துணைவேந்தர் பார்த்தசாரதி மல்லிக், சமூக அறிவியல் மற்றும் மொழிகள் துறை முதன்மையர் வி. செல்வம், இணை முதன்மையர் சரிகா குப்தா, வணிகவியல் துறை தலைவர் எஸ். உஷா உள்ளிட்டோர் மாநாட்டில் பங்கேற்றனர்.