• 16 Apr, 2026

கேஎம்சிஹெச் நடத்திய “லிவர் நியூட்ரிகான் 2026” சர்வதேச மாநாடு

கேஎம்சிஹெச் நடத்திய “லிவர் நியூட்ரிகான் 2026” சர்வதேச மாநாடு

கோவை மெடிக்கல் சென்டர் மற்றும் மருத்துவமனை (கேஎம்சிஹெச்) சார்பில் கல்லீரல், கணையம் மற்றும் இரைப்பை குடல் நோய்களுக்கான ஊட்டச்சத்து குறித்த ஒரு நாள் சர்வதேச மாநாடான லிவர் நியூட்ரிகான் 2026 கோவையில் நடைபெற்றது. இதில் “கேஎம்சிஹெச் லிவர் டயட்” என்ற புதிய உணவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு, கல்லீரல் நோயாளிகளுக்கான அறிவியல் அடிப்படையிலான ஊட்டச்சத்து சிகிச்சையின் முக்கியத்துவம் விவாதிக்கப்பட்டது.

கோவை மெடிக்கல் சென்டர் மற்றும் மருத்துவமனை (கேஎம்சிஹெச்) சார்பில் கல்லீரல், கணையம் மற்றும் இரைப்பை குடல் நோய்களுக்கான ஊட்டச்சத்து குறித்து ஒரு நாள் விரிவான சர்வதேச மாநாடான லிவர் நியூட்ரிகான் 2026 கோவையில் வெற்றிகரமாக நடைபெற்றது. சிறப்பு உணவு முறைகள் மற்றும் மருத்துவ ஊட்டச்சத்து சிகிச்சை தொடர்பான அறிவைப் பகிர்ந்து கொள்ளும் முக்கிய அறிவியல் தளமாக இந்த மாநாடு அமைந்தது.

இந்த மாநாட்டின் முக்கிய நிகழ்வாக “கேஎம்சிஹெச் லிவர் டயட்” என்ற புதிய உணவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதிகரித்து வரும் கல்லீரல் கொழுப்பு நோய் (Steatotic Liver Disease), கல்லீரல் செயலிழப்பு மற்றும் நாள்பட்ட கல்லீரல் நோயாளிகள் சந்திக்கும் ஊட்டச்சத்து குறைபாடுகளைச் சரிசெய்யும் நோக்கில் இந்த புதுமையான உணவுத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

கேஎம்சிஹெச் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை குழு, கேஎம்சிஹெச் ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறைத் துறை மற்றும் டாக்டர் என்.ஜி.பி கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகியவற்றின் கூட்டு மருத்துவ மற்றும் அறிவியல் ஆராய்ச்சியின் பயனாக இந்த உணவு முறை வடிவமைக்கப்பட்டுள்ளது. நோயாளிகளின் உடல் நலத்தை மேம்படுத்த தேவையான துல்லியமான பெருஊட்டச்சத்துக்கள் மற்றும் நுண்ணூட்டச்சத்துக்கள் வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையில், மருத்துவ ஆதாரங்களின் அடிப்படையில் இந்த உணவு திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த உணவுப் பரிந்துரைகள் நமது புவியியல் மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளன. எளிதில் கிடைக்கக்கூடிய பொருட்களை பயன்படுத்துவதால், பொதுமக்களுக்கு இந்த சிகிச்சை உணவு எளிதில் அணுகக்கூடியதாக இருக்கும். மேலும், பெரும்பாலும் சைவ உணவை அடிப்படையாகக் கொண்டுள்ளதால், உள்ளூர் மக்களால் இத்திட்டத்தை எளிதில் பின்பற்ற முடியும்.

மாநாட்டின் போது கல்லீரல், கணையம், இரைப்பை குடல் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் வழிநடத்திய பல்வேறு தொழில்நுட்ப அமர்வுகள் நடைபெற்றன. இதில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் மற்றும் பாலக்காடு பகுதிகளில் இருந்து சுமார் 300 பங்கேற்பாளர்கள், அதாவது உணவு நிபுணர்கள், மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். கல்லீரல் மற்றும் குடல் தொடர்பான சிக்கலான நோய்களை நிர்வகிப்பதில் மருத்துவ ஊட்டச்சத்து சிகிச்சையின் முக்கிய பங்கு குறித்து விரிவான விவாதங்கள் நடைபெற்றன.

மாநாட்டில் உரையாற்றிய கேஎம்சிஹெச் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் நல்லா ஜி. பழனிசாமி , கல்லீரல் கொழுப்பு நோயின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இம்மாநாடு காலத்தின் கட்டாயம் எனக் குறிப்பிட்டார். கல்லீரல் நோய்களைத் தடுப்பதற்கும், கல்லீரல் சிகிச்சை மற்றும் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் நோயாளிகளின் நீண்டகால ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்கும் அறிவியல் பூர்வமான அணுகுமுறையை கேஎம்சிஹெச் பின்பற்றுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

நிறைவாகப் பேசிய கேஎம்சிஹெச் நிர்வாக இயக்குனர் டாக்டர் அருண் பழனிசாமி , தீவிர உடல்நலக் குறைபாடுகளால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சரியான ஊட்டச்சத்து மற்றும் மறுவாழ்வு வழங்குவதன் மூலம் சிகிச்சையின் தரத்தை மேம்படுத்த மருத்துவ சமூகத்தினர் தொடர்ந்து ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.