• 16 Apr, 2026

“69 இனங்கள்; 21,091 வலசை பறவைகள்: பாசனக் குளங்களின் அவசியத்தை வெளிப்படுத்திய தாமிரபரணி கணக்கெடுப்பு”

“69 இனங்கள்; 21,091 வலசை பறவைகள்: பாசனக் குளங்களின் அவசியத்தை வெளிப்படுத்திய தாமிரபரணி கணக்கெடுப்பு”

தாமிரபரணி ஆற்றுப் பகுதிகளைச் சுற்றியுள்ள 68 பாசனக் குளங்களில் நடைபெற்ற வலசை பறவைகள் கணக்கெடுப்பில், 69 இனங்களைச் சேர்ந்த 21,091 பறவைகள் பதிவாகி, பாசனக் குளங்கள் வலசை மற்றும் உள்நாட்டு பறவைகளுக்கான முக்கிய வாழ்விடங்கள் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

சமீபத்தில் திருநெல்வேலி பகுதியில், தாமிரபரணி ஆற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் வலசை பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற்றது. இந்தக் கணக்கெடுப்பில் திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள 68 பாசனக் குளங்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. பறவை நிபுணர்களின் வழிகாட்டுதலுடன், எட்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்ட 250-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் இதில் பங்கேற்றனர்.

இந்தக் கணக்கெடுப்பை ஒருங்கிணைத்த மு. மதிவாணன் கூறுகையில், “68 பாசனக் குளங்களில் 69 இனங்களைச் சேர்ந்த மொத்தம் 21,091 வலசை பறவைகள் பதிவாகியுள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தின் கடம்பக்குளம் பகுதியில் அதிகபட்சமாக 45 இனங்களைச் சேர்ந்த 2,292 பறவைகள் பதிவானது” என்றார்.

இதனைத் தொடர்ந்து வெள்ளூர் கஸ்பா, பெருங்குளம், கங்கை கொண்டான் மற்றும் மேல்புதுக்குடி சுனை போன்ற பகுதிகள் பறவைகளின் அதிக இருப்பால் முக்கியமாகக் காணப்பட்டன. சிறுநீர்க்காகம், நாமக் கோழி, மீசை ஆலா, சின்ன ஆன்றில், நீளவால் இலைக் கோழி மற்றும் தகைவிலான் போன்ற பறவைகள் அதிக எண்ணிக்கையில் பதிவாகின.

பதிவான பறவைகளில் 36 சதவிகிதம் வலசை பறவைகளாகும். இவை வடக்கு ஐரோப்பாவின் இனப்பெருக்க பகுதிகளை இந்தியா உள்ளிட்ட தென்னாசிய குளிர்கால ஈரநிலங்களுடன் இணைக்கும் Central Asian Flyway பாதையைப் பயன்படுத்தி வருகின்றன. 2026 கணக்கெடுப்பில் மட்டும் 8,912 வலசை பறவைகள் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், கருவால் மூக்கன், வரித்தலை வாத்து, ஊசிவால் வாத்து, நீலச்சிறகு வாத்து, நாமத்தலை வாத்து போன்ற Near Threatened (அச்சுறுத்தல் நிலையை அண்மித்த) இனங்களும் இதில் அடங்கும். சில பாசனக் குளங்களில் பறவைகள் இனப்பெருக்க நிலையிலும் காணப்பட்டன. இதன் மூலம், பாதுகாக்கப்பட்ட பறவைக் காப்பகங்களைத் தாண்டியும் பாசனக் குளங்கள் இனப்பெருக்கத்திற்கு மிக முக்கியமானவை என்பது உறுதியாகிறது.

திடக் கழிவுகள் கொட்டுதல், கழிவுநீர் கலப்பு, அயல் தாவரங்கள் மற்றும் மீன் இனங்களின் ஆக்கிரமிப்பு போன்றவை பறவைகளின் வாழ்விடங்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளன. எனவே, வலசை மற்றும் உள்நாட்டு பறவைகளின் நீண்டகாலப் பாதுகாப்பிற்குப் பாசனக் குளங்களை பாதுகாத்தல், மீளுருவாக்கம் மற்றும் நிலைத்த மேலாண்மை நடவடிக்கைகள் அவசியம் என வல்லுநர்கள் வலியுறுத்துகின்றனர்.